கூடலூரில் முடங்கிய சர்வர்; இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் அவதி


கூடலூரில் முடங்கிய சர்வர்; இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் - சுற்றுலா பயணிகள் அவதி
x

கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யாத நிலையில், இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.

கூடலூர்,

நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

எனினும், நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோல் கொடைக்கானலுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யவில்லை என தகவல் வெளியானது. இதனால், பயணிகளுக்கு, இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. முதுமலை வனப்பகுதி எல்லையில் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வர கூடிய பயணிகளும் அவதியடைந்து உள்ளனர்.


Next Story