செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்


செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
x

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டாவது நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஊழல் கறை படிந்தவரை உடனடியாக அமைச்சராக்கியதன் மூலம் தமிழ்நாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் களங்கத்தைச் சேர்த்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

செந்தில் பாலாஜிக்கு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்ன இது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நேரடியாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். அவர் அமைச்சராக்கப்பட்டதால், வழக்கின் சாட்சிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் நியாயமாக்கப்படும்" என்று தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர் சித்தார்த்தா லூத்ராவை நோக்கி வினா எழுப்பியுனார்.

நீதியரசர் எழுப்பிய வினாக்களையும் தெரிவித்த கண்டனத்தையும் தமிழக அரசை தலைமையேற்று நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினனை நோக்கி எழுப்பப்பட்ட வினாவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும்போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை என்று கூறியிருந்தேன். எனது ஐயம் சரியானதுதான் என்பது இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தெரிவித்த கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி சுப்ரீம் கோர்ட்டிற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story