காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை


காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
x

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 2 முறை தலைவராகவும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசக்கருவி மற்றும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது.

மணப்பாக்கம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த சூழலில் சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தற்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வாழ்வைப் போற்றும் விதமாக அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும், ஈ.வெ.கே.சம்பத் - சுலோசனா சம்பத் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் 14.12.2024 அன்று இயற்கை எய்தினார்.

கடந்த 21.12.1948-ல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார். 2004-ல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய அரசில் ஜவுளித்துறை இணை மந்திரியாக பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்.

தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப் பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Next Story