செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை: திருமாவளவன்

செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
மதுரை,
ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளார். செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. இது அவர் அளித்த பேட்டியில் இருந்து தெரியவருகிறது. யார்?.. யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை செங்கோட்டையில் வெளிப்படையாக கூறலாம். அதிமுகவை, ஒரு திராவிட இயக்கம்; பெரியார் இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிக்கிறது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பு வரவேற்கத்தக்கவை வடிவில் இல்லை. அமெரிக்கா நமது மீது விதித்திருக்கிற 50 சதவீத வரி விதிப்பை மடை மாற்றம் செய்வதற்கு பிரதமர் முயற்சிக்கிறார் என்று விமர்சனங்கள் வெளிவந்துள்ளது. 28 சதவீதமாக இருந்த வரி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறுகுறு, நடுத்தர தொழில் செய்யக்கூடியவர்கள் சிறுவணிகர்கள், எளிய மக்கள் பெரிதும் பயன்பட போவதில்லை என வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






