குறைந்த விலையில் ஆடைகள் விற்பனை; அமெரிக்க வரிவிதிப்பை பயன்படுத்தி ஈரோட்டில் நூதன மோசடி

முன்னணி நிறுவனங்களின் ஆடைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
ஈரோடு,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக ஈரோட்டில் முன்னணி நிறுவனங்களின் ஆடைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திண்டலில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் பல ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள், பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதனை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க குவிந்த நிலையில், அங்கு சேதமடைந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து அங்கிருந்த விற்பனையாளர்களிடம் விசாரித்தபோது, இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






