திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்


திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்
x
தினத்தந்தி 25 Jun 2025 9:21 PM IST (Updated: 25 Jun 2025 9:23 PM IST)
t-max-icont-min-icon

அமாவாசை தினத்தையொட்டி திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி,

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் கோவில் முன்பு உள்ள கடல் திடீரென உள்வாங்கி காணப்பட்டது. அமாவாசை தினத்தையொட்டி கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது. கோவில் கடற்கரை பகுதியில் உள்ள செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் 80 அடி தூரம் வரை உள்வாங்கியது.

கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன. மேலும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பச்சை பாசிகள் படிந்த பாறைகள் மீது ஆபத்தை உணராமல் நின்று செல்பி புகைப்படங்களை எடுத்துச் சென்றனர்.

1 More update

Next Story