சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்


சென்னையில் நாய், பூனை வளர்க்க உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்
x
தினத்தந்தி 30 Oct 2025 4:22 PM IST (Updated: 30 Oct 2025 5:20 PM IST)
t-max-icont-min-icon

செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் பெற ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாமன்ற குழு தலைவர் சதீஷ்குமார் பேசுகையில், எனது வார்டு 182-ல் மக்கள் எனக்கு வாக்களித்தனர் ஆனால் மாநகராட்சி ஆவணங்களில் அது 184-வது வார்டாக காண்பிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் நகரில் கடந்த 3 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை இதுவரை சரி செய்யவில்லை. அதனால் அங்கு எந்த பணியும் சரியாக நடைபெறவில்லை. நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்ததாக கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் சதீஷ்குமாரை அமரும்படி குரல் கொடுத்தனர். பெரும்பாலான தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. உறுப்பினர்களும் பதிலுக்கு குரல் கொடுத்தனர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அந்த திட்டத்தை கொண்டு வந்ததாக தி.மு.க.வினர் பதிலுக்கு குரல் கொடுத்தனர். அப்போது சபையில் ஒரே அமளியாக இருந்தது. இறுதியில் சதீஷ்குமார் அ.தி.மு.க. உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் செல்ல பிராணிகள் உரிமம் பெறுவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 24-ந்தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் அப்படி பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள் மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப்பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

1 More update

Next Story