புரட்சியாளர் அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்... சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் - திருமாவளவன்


புரட்சியாளர் அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார்... சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் - திருமாவளவன்
x

அம்பேத்கரைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. அவர் அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை கூறலாம் என பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று காலை கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதேபோன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கரை பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு உடனடியாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.

அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும்தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story