தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி அவசியமான ஒன்று; மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை,
மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, அறிவிப்பு வரும் முன்பே எதிர்ப்பைத் தொடங்கி விட்டார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்போவது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைத் தான். அவர்கள் கட்சி பாகுபாடின்றி தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி பணியாற்றி, போலி வாக்காளர்கள் இருந்தால் நீக்கப் போகிறார்கள். இரட்டை வாக்குகள் இருந்தால் நீக்கப்போகிறார்கள்.
இதற்கான அறிவிப்பு வரும் முன்பே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? தமிழக அரசு ஊழியர்கள் மீதே அவருக்கு நம்பிக்கையில்லையா?. இதிலிருந்தே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கான வாக்காளர் தரவு பகுப்பாய்வில் மொத்தம் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. 4,370 இரட்டை வாக்காளர் பதிவுகளும், போலி முகவரியுடன் 9,133 வாக்காளர்களும் உள்ளதாக தெரிகிறது.
கொளத்தூர் தொகுதியில் உடனடியாக தணிக்கை மேற்கொண்டு, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் தொகுதியிலேயே இப்படி நிலைமை என்றால் மற்ற தொகுதிகளிலும் எவ்வளவு போலி வாக்காளர்கள் இருக்கக்கூடும்?.
தேர்தல் தில்லுமுல்லு வேலைகளில் தி.மு.க.வினர் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பது தமிழகம் அறிந்த ஒன்று தான். கள்ள வாக்கு செலுத்துவதிலும், போலி வாக்காளர்களை சேர்த்து தேர்தல் மோசடிகள் செய்வதிலும் தி.மு.க.வினருக்கு நிகர் அவர்கள் மட்டுமே.
கொடூரமான திமுக ஆட்சி மீது தமிழக வாக்காளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 2026 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக வாக்காளர்கள் திண்ணமாக உள்ளனர். ஜனநாயகத்தில் துளியும் நம்பிக்கை அற்ற திமுக-வினர், தேர்தலில் வெல்வதற்கு கடைசியாக நம்பியிருந்த ஆயுதம் கள்ள ஓட்டு ஒன்று தான். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தின் மூலம் இவர்களின் இந்தக் கனவும் கலைந்துள்ளது.
தி.மு.க.வினரின் தேர்தல் மோசடி திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகப் போகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வரலாற்றுத் தோல்வி அடையப் போவது உறுதி. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறப்போவதும் உறுதி. ஆனால், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. போலி வாக்காளர்கள் கண்டறியப்பட வேண்டிய தேவை உள்ளது. இரட்டை வாக்குகள் அகற்றப்பட வேண்டியதும் முக்கியம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






