நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய் - அமைச்சர் மூர்த்தி தகவல்
நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் இதுவரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை,
வணிகவரித்துறையில் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் 23-ந்தேதி(நேற்று) வரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (24.12.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மறைந்த வணிகர்களின் குடும்பத்தினரான திருத்துறைப்பூண்டி பா.சுசிலா, ராசிபுரம் யு.கஸ்தூரி, மற்றும் திருவண்ணாமலை வி.விஜயலட்சுமி ஆகிய மூன்று நபர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் சார்பில் குடும்ப நல நிதி உதவியாக தலா ரூ.3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம்) காசோலையை அமைச்சர் வழங்கினார்.
வணிகவரித்துறை வருவாய் நடப்பு 2024-25 நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் நேற்று (23.12.2024) வரை ரூ.99,875 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல் தெரிவித்தார். மேலும் வரி வருவாய் வளர்ச்சியில் இந்திய அளவில் தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் முதன்மையாக விளங்குவதை சுட்டிகாட்டி, வரும் மாதங்களில் அனைத்து இணை ஆணையர்களும் மேலும் சிறப்புடன் உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.