சாதி தொடர்பாக விதிகளை திருத்தம் செய்யாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து


சாதி தொடர்பாக விதிகளை திருத்தம் செய்யாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து
x

கோப்புப்படம் 

சாதி தொடர்பாக விதிகளை திருத்தம் செய்யாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, "சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் சாதிப் பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களை, சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயர்கள் உள்ளது குறித்தும் தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "இதேபோன்ற வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சாதி குறித்து சங்கங்களின் விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து சங்கங்களுக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

அதற்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, "அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் எந்த சாதி சங்கங்களும் தங்களது விதிகளை திருத்தியதாக தெரியவில்லை. அவ்வாறு விதிகளை திருத்தாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும். ஒரு சில அரசுப்பள்ளிகள் கூட சாதிப்பெயர்களில் இயங்கி வருகின்றன'' என்று கூறினார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அந்த பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் அந்த பள்ளிக்கு சூட்டப்பட்டு இருக்கலாம் என்று பதில் அளித்தார். உடனே நீதிபதி, ''எப்படியாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படுமா? என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறி, விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

1 More update

Next Story