பொது விவாதத்துக்கு தயார்: பெரியார் குறித்து சீமான் மீண்டும் பேச்சு


பொது விவாதத்துக்கு தயார்: பெரியார் குறித்து சீமான் மீண்டும்  பேச்சு
x
தினத்தந்தி 12 Jan 2025 12:34 PM IST (Updated: 12 Jan 2025 2:17 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு தொகுதி வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று சீமான் அறிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வடலூரில் பெரியார் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

சீமானின் இந்த பேட்டி சர்ச்சையாகி இருந்தநிலையில், பெரியார் குறித்த பொது விவாதத்துக்கு தயார் என சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார். வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார்..?. பெரியார் குறித்து பேச பொது விவாதத்திற்கு இரு கரம் நீட்டி தயாராக இருக்கிறேன்.

வள்ளுவர், பாரதியார் ஆகியோர் பெண்ணுரிமைக்காக பேசி உள்ளனர். பெரியார் தத்துவங்களை மட்டும் பேசி வாக்கு சேகரிக்க எந்த தலைவராவது தயாரா..?. பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது.

திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆரியத்தோடு கைகோர்த்துக் கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும், அண்ணாவும் கூறினர். ஆனால் திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார்.

பெரியார் மணியம்மையை திருமணம் செய்தபோது ஆரியர் ராஜாஜியை துணைக்கு அழைத்தார். 1962-ம் ஆண்டு தேர்தலில் ராஜாஜியின் கட்சியுடன் அண்ணா கூட்டணி வைத்தார்.

பெரியார் எந்த சமுதாயத்திற்கு நீதியை பெற்று கொடுத்தார். பெரியார் சமூக நீதியை நிலைநாட்டினார் என்றால், பா.ம.க. ஏன் இன்னும் போராடுகிறது? அம்பேத்கருடன் பெரியாரை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள்" என்று சீமான் கூறினார்.


Next Story