ராமநாதபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
ராமநாதபுரம்,
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினம் மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர். இரவு வரையிலும் இந்த போராட்டம் நீடித்தது. அதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு காத்திருப்பு போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர்.
நேற்று 2-வது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ் சேசுராஜா, எமரிட், சகாயம் மற்றும் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்பட ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும், மீனவர்களுக்கு அபராதம் விதித்து இலங்கை சிறையில் அடைக்கும் மனித உரிமை மீறலுக்கு எதிரான அந்நாட்டு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 3ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராமநாதபுரம் சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை சந்தித்தார். அப்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க கவர்னரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்கள் போராட்டத்தால், ராமேசுவரத்தில் இருந்து இன்று 7-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.