மழை முன்னெச்சரிக்கை: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மீட்பு, நிவாரணப் பணிகளை போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு 2021-ல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை வந்துவிட்டதா? அதில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களில் ஸ்டாலினின் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன ? என்பதையெல்லாம் இந்த அரசு, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று வலிறுத்துகிறேன்.
ஸ்டாலினின் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சென்னையில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். எனவே, ஸ்டாலினின் திமுக அரசு, மக்களை ஏமாற்றும் நாடகங்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்" என்று அதில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.