வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையை எரித்துக்கொன்ற மகன்


வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையை எரித்துக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 29 Oct 2024 11:31 AM IST (Updated: 29 Oct 2024 11:54 AM IST)
t-max-icont-min-icon

சத்யமூர்த்தி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

தண்டையார்பேட்டை,

சென்னை தண்டையார்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. குப்பம் 3-வது தெருவை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகா. இவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு வேலை செய்து வருகிறார். சத்யமூர்த்தி, கடந்த 6 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் மகா வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் சத்யமூர்த்தி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காசிமேடு போலீசார் சத்யமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் நலக்குறைவு காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அவரது உடல் அருகே மண்எண்ணெய், பெட்ரோல் கேன் எதுவும் இல்லை. இதனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சத்யமூர்த்தி தலையில் பலத்த காயம் இருப்பது தெரிந்தது. கைரேகை நிபுணர் நிஷாந்தி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வு அறிக்கையின்படி இன்ஸ்பெக்டர் வசந்தராஜா விசாரணை மேற்கொண்டார்.

இது தொடர்பாக சத்யமூர்த்தியின் மகனான தனுஷ்கோடி (27) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். தனுஷ்கோடி சொந்தமாக ஆட்டோ வைத்து இருந்தார். ஆனால் அந்த ஆட்டோவை விற்று, அந்த பணத்தில் மதுகுடித்து உள்ளார். பின்னர் வாடகை ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் தனுஷ்கோடியை அவரது தந்தை சத்யமூர்த்தி கண்டித்தார்.

நேற்று முன்தினமும் வேலைக்கு செல்லாததால் மகனை சத்யமூர்த்தி திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த தனுஷ்கோடி, தந்தையை கீழே தள்ளினார். இதில் சத்யமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் பயந்து போன தனுஷ்கோடி வீட்டில் இருந்த போர்வை மற்றும் கால்மிதியடியை தந்தை மீது போட்டு தீ வைத்து எரித்துக்கொன்று விட்டு, அவரே தீக்குளித்து தற்கொலை செய்ததுபோல் நாடகம் ஆடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தந்தையை எரித்துக்கொன்ற தனுஷ்கோடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story