புதுக்கோட்டை: ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டையில் ஓட்டல் ஒன்றில் பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகம் அருகே சிறிய ஓட்டல் நடத்தி வருபவர் விஜயலட்சுமி. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமி அருகில் உள்ள தனது வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ஓட்டலில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தெரிந்ததும் விஜயலட்சுமி உடனடியாக ஓட்டலுக்கு சென்று பார்த்துள்ளார். அதற்குள்ளாக ஓட்டலில் இருந்த சிலிண்டரும் வெடித்துள்ளது. இதன் காரணமாக தீ பயங்கரமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.