சபரிமலையில் 25 லட்சம் டின் அரவணை, அப்பம் தயாரித்து இருப்பு வைக்க நடவடிக்கை
பம்பை ஆற்றில் உடைமைகளை வீச வேண்டாம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் தினமும் பூஜை நடைபெறும்.
இந்த சீசனையொட்டி சாமி தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து கேரள தேவஸ்தான துறை மந்திரி வாசவன் எருமேலி, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் நேரில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பின்னர் அவர் கோட்டயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "நடப்பு மண்டல மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, அய்யப்ப பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அப்பம், அரவணை பிரசாதம் இருப்பு வைக்கப்படும். குறைந்தது 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 2,500 வாகனங்கள் எருமேலியிலும், 2,000 வாகனங்கள் நிலக்கல் பகுதியிலும் கூடுதலாக நிறுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
நிலக்கல்லில் மட்டும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது. அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக பம்பையில் 540 கழிப்பிட வசதி, நிலக்கல்லில் 1,120 கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. மண்டல காலத்தில் 25 லட்சம் அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பம்பை, அப்பச்சி மேடு, சன்னிதானம் உள்பட பக்தர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நடைபாதைகளிலும் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படும்.
சன்னிதானத்தின் பல்வேறு இடங்களில் 1,005 கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 18 அரங்குகளில் 3,600 பேர் ஓய்வு எடுக்க வசதி செய்து உள்ளோம். நிலக்கல்லில் 7 ஆயிரம் பேர் தங்கி ஓய்வு எடுக்க விசாலமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை முதல் சன்னிதானம் வரை 24 மணி நேரமும் சுக்கு நீர் வழங்க 60 மையங்கள் செயல்படும். சரம் குத்தி முதல் சன்னிதானம் வரை கியூ மண்டபத்தில் காத்து நிற்கும் பக்தர்களுக்கு சுக்கு நீர் வினியோகம் செய்யப்படும்.
புனிதமான பம்பை ஆற்றை மாசு ஏற்படாமல் பாதுகாப்பது அனைவரது கடமையாகும். அந்த வகையில், பம்பையில் நீராடிவிட்டு பக்தர்கள் தங்களது உடைமைகளை ஆற்றில் போட்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரசாரம் நடத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு உள்பட தென் மாநில தேவஸ்தான மந்திரிகள், உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்று மந்திரி வாசவன் கூறினார்.