காணும் பொங்கல்: சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு இன்று மக்கள் குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
சென்னை,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம், உழவர்களுக்கு உறுதுணையாக இருந்து விவசாயத்திற்கு பேருதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படட்டது.
இதையடுத்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
கடலில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் விழா, இன்று காலையிலேயே களை கட்டியது. இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் குடும்பத்துடன் குவிந்தனர். காணும் பொங்கலை பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரையின்பேரில் 16 ஆயிரம் போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள்:
மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கை பட்டைகளில் குழந்தையின் முகவரி, பெற்றோரின் செல்போன் எண் எழுதி கட்டப்படும். மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்ட்டு வருகின்றனர்.
வண்டலூரில் குவிந்த மக்கள் :
காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மதியம் வரை சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்தனர். தொடர்ந்து மக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து, அங்கிருக்கும் வன விலங்குகளை பார்வையிட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல இலவச வாகன வசதி சேவை செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள பழவேற்காட்டில் இன்று காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் பழவேற்காட்டில் உள்ள டச்சு கல்லறை நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர்.பொதுமக்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், புலிக்குகை, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளித்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் :
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் இன்று (16.01.2025) பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், MGM, வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், அட்டவணை பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
மேலும், பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி / இறக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.