பொங்கல் விடுமுறை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று சிறப்பு ரெயில்
முன்பதிவில்லா சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தென் மவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தென் மாவட்ட ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொங்கல், மகரவிளக்கு பூஜையையொட்டி பயணிகளுக்காக சென்னையில் இருந்து இன்றும் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று (ஜன.13ம் தேதி) பிற்பகல் 2.15 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவில்லா சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்றும், இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், அரியலூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே தனது எக்ஸ் வலைதளத்தில், "பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க, ரெயில் எண். 06161 சென்னை எழும்பூர் - மதுரை முன்பதிவு செய்யப்படாத ஒரு வழி சிறப்பு ரெயில் (MEMU) இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.