தோட்டத்து அறையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கரடிக்கல் ஊராட்சி அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37). இவர் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கவிதா (32). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சிலம்பரசன் தன் கிராமத்தில் சொந்தமாக வீடு கட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் சிலம்பரசனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவருத்தம் அடைந்த சிலம்பரசன், வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அதனால் குடும்பத்தினர், உறவினர்கள் தேடினர். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே பகுதியில் ஒரு தோட்டத்து அறையில் அவர் இருக்கலாம் என்று நினைத்து அங்கு சென்று பார்த்தனர். அங்கு தூக்கில் சிலம்பரசன் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீஸ்காரர் சிலம்பரசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் குடும்ப தகராறில் தோட்டத்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






