அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்... தூத்துக்குடியில் பரபரப்பு


அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய வாலிபரை சுட்டுப்பிடித்த போலீசார்... தூத்துக்குடியில் பரபரப்பு
x

தூத்துக்குடியில் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியபோது சுட்டுப்பிடிக்கப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் பூவன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 70). இவர்களது மகள் ராமஜெயந்தி (45). பூவன் இறந்துவிட்டதால், தாய்-மகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சீதாலட்சுமி, ராமஜெயந்தி ஆகிய 2 பேரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த இரட்டை கொலை குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 9 தனிப்படை அமைத்து மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், மேலநம்பிபுரத்தை சேர்ந்த மகேஷ் கண்ணன், முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சா போதையில் இந்த கொலை, கொள்ளையை அரங்கேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து முத்துலாபுரம் காட்டுப்பகுதியில் வேல்முருகன், மகேஷ் கண்ணன் ஆகியோர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது தப்பி ஓடியபோது 2 பேரும் தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முனீஸ்வரன் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 9 தனிப்படையைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடினார்கள். இருப்பினும் முனீஸ்வரன் சிக்கவில்லை.இந்நிலையில், முனீஸ்வரன், அயன்வடமலாபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கதவை தட்டினார்கள்.

போலீசார் வந்ததை அறிந்த முனீஸ்வரன் வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி ஓடினார். இதை அறிந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எட்டயபுரம்-கீழஈரால் பைபாஸ் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்து இருப்பதாக முனீஸ்வரன் தெரிவித்தார். அந்த நகைகளை மீட்பதற்காக முனீஸ்வரனை, குளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் அழைத்து சென்றனர்.

காட்டுப்பகுதியில் நகைகளை எடுக்கும்போது, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீஸ்காரர் ஜாய்சன் நவதாஸ் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் முத்துராஜாவுக்கு இடது கையிலும், போலீஸ்காரர் ஜாய்சன் நவதாசுக்கு வலது கையிலும் வெட்டு விழுந்தது. உடனடியாக போலீசார் எச்சரிக்கை செய்தனர். எனினும் முனீஸ்வரன் தப்பி ஓடினார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா துப்பாக்கியால் முனீஸ்வரனின் வலது காலில் சுட்டார். இதில் குண்டு பாய்ந்ததில் காயமடைந்த அவர் சுருண்டு விழுந்தார்.

காயம் அடைந்த முனீஸ்வரனையும், வெட்டுக்காயம் அடைந்த 2 போலீசாரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story