தென்காசியில் ரோந்து சென்ற காவலருக்கு கத்திக்குத்து
கத்தியால் குத்திவிட்டு தப்பிய லெனினை காவல் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கருத்தானூரில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தவர்களை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் சென்றனர். அப்போது லெனின் என்ற குமார் என்பவரை காவலர் மாரிராஜா விசாரித்தார்.
இந்த விசாரணையின்போது, காவலர் மாரிராஜா மற்றும் லெனின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த லெனின் என்ற குமார், காவலர் மாரிராஜாவை லெனின் கத்தியால் குத்தினார். இதையடுத்து அங்கிருந்து தப்பியோட முற்பட்டார். அவரை சக காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். கத்திக்குத்துக்கு ஆளான காவலர் மாரிராஜா, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதாகியுள்ள லெனின் மீது திருட்டு, கஞ்சா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.