காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு

காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மனு அளித்துள்ளார்.
திருப்பத்தூர்,
காதலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் விஷமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தற்போது எலக்டிரீஷியன் வேலை செய்து வருகிறேன். திருப்பத்தூர் அடுத்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் நானும் காதலித்து வருகிறோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் எங்களது திருமணத்துக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும், நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொள்ள இதுநாள் வரை காத்திருந்தோம். ஆனால், எங்கள் விருப்பத்தை ஏற்காத பெண் வீட்டார், எங்கள் திருமணத்துக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நான் விரும்பிய பெண்ணை அவர்களது குடும்பத்தார் மறைத்து வைத்து என்னுடன் பேச விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் அவரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்ற போது என்னை சரமாரியாக தாக்கி பெண்ணை எங்கேயோ சென்றுவிட்டுவிட்டனர். அவரை இனி பார்க்க முடியாது என கூறுகின்றனர். எனவே, அவர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. நான் காதலிக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மனுவை போலீசாருக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.