தி.மு.க. அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - எடப்பாடி பழனிசாமி


தி.மு.க. அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம் 

மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

புயலின் தாக்கத்தால் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தி.மு.க. அரசு தள்ளியிருக்கிறது. தி.மு.க. அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு , வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக தி.மு.க. அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது.

ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த தி.மு.க. அரசு. வயிற்று பசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த தி.மு.க. அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்.

பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story