ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்: நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்


ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்: நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
x

சென்னை திரும்பும் மக்களால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை ஒட்டி, தொடர் விடுமுறையை சொந்த ஊர்களிலும், சுற்றுலா தலங்களிலும் கழிக்க சென்றவர்கள், வழக்கமான பணிகளுக்கு செல்லும் விதமாக சென்னைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.

இதனால், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. திருவான்மியூர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். மாநகர பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறிச் செல்கின்றனர். இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகருக்கு செல்லும் மாநகர பேருந்துகளும் நிரம்பி வழிகிறது.

விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னை நோக்கி படையெடுத்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் தாம்பரம், பெருங்களத்தூர் வரை இந்த பாதிப்பு நீடித்தது. பெரும்பாலானவர்கள் கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் சென்னை திரும்பியதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் மின்சார ரெயிலில் பயணிக்க முற்பட்டுள்ளனர்.


Next Story