சுற்றுப்பயணத்தில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்: எடப்பாடி பழனிசாமி


சுற்றுப்பயணத்தில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்: எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 July 2025 10:09 AM IST (Updated: 8 July 2025 1:35 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

கோவை,

தமிழக சட்டசபை தேர்தலை கருத்தி கொண்டு அதிமுக தற்போதே தேர்தல் பிரசார பணிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களை சந்தித்து பேசினார் .

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

கேள்வி: பல தரப்பட்ட மக்களை பார்த்து இருக்கிறீர்கள். சுற்றுப்பயணம் நேற்று முதல் முடிந்து இன்றைக்கு இரண்டாவது நாள் தொடங்கி இருக்கிறீர்கள்.எவ்வளவு நம்பிக்கை தந்திருக்கிறது.

பதில்: முதல்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் எங்களுடைய எழுச்சி தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.தொடக்கத்தில் இருந்தே தேர்தல் சுற்றுப்பயணம் நேற்று இரவு முடிகின்ற வரை மக்களிடம் எழுச்சியை பார்க்க முடிந்தது.இந்த எழுச்சியே எங்களுக்கு நிச்சயமாக வெற்றியை தேடித்தரும் என்று நம்புகிறோம்.

கேள்வி: கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என்று நீங்கள் அழுத்தம் திருத்தமாக சொன்னீர்கள்.அந்த மேலும் சில கட்சிகள், ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இருந்து வருமா, இல்லை விஜய்யிடம் சேருபவர்கள் உங்கள் பக்கம் திரும்புவார்களா?

பதில்: அதெல்லாம் இப்போது எப்படி சொல்ல முடியும். நீங்கள் மிகப்பெரிய ரகசியத்தை உடைக்கலாம் என்று பார்க்கிறீர்கள்.சூழ்நிலைக்கு தக்கவாறு எந்த பக்கம் இருந்தாலும் எங்களுடைய கூட்டணிக்கு பல கட்சிகள் வந்து சேர இருக்கின்றன.நிச்சயமாக பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கும்.

கேள்வி: தமிழகத்தில் எப்போதுமே இந்த விவசாயிகள் மக்கள் சந்திப்பு அரசியல் கட்சிக்கு வலுவை கொடுக்கும்.நீங்கள் நேற்று விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களை எல்லாம் பார்த்தீர்கள். அடுத்தக்கட்டமாக 38 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்யப்போகிறீர்கள்.எஞ்சியிருக்கக்கூடிய 38 தொகுதிகளிலும் உங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் என்ன செய்தி சொல்லப்போகிறீர்கள்.

பதில்: தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் எங்களது தேர்தல் சுற்றுப்பயணத்தின் மூலமாக என்னென்ன நன்மை கிடைக்கும் என்ற செய்திகள் எல்லாம் கிடைக்கும் என்பதை தேர்தல் சுற்றுப்பயணத்தில் சொல்வேன். இன்றைய தினம் மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஏன் என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம், இதை செய்வோம் என்று சொல்லி 525 அறிவிப்புகளை வெளியிட்டு நிறைவேற்ற முடியாமல் இன்றைக்கு விழி பிதுங்கி இருக்கின்ற காட்சியை பார்க்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரைக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.மக்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி இருந்த காரணத்தினால் தான், அ.தி.மு.க. கட்சி இருந்த காரணத்தினால் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்து அதன் மூலம் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.

கேள்வி: நேற்று கடுமையான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறீர்கள். தி.மு.க. ஊழல் செய்திருக்கிறார்கள். இந்த 5 லட்சம் கோடிக்கான விசாரணை கமிஷன் வைப்போம் என்று முக்கிய குற்றச்சாட்டை வைத்திருக்கிறீர்கள்.

பதில்: ஏற்கனவே அதற்கு நான் பதில் சொல்லி விட்டேன். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு காலம் ஆகிறது. 4 ஆண்டு காலத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள்.அதோடு இன்றைக்கு இந்த ஆட்சி வந்தபிறகு வருமானம் உயர்ந்திருக்கிறது. வரிகள் போட்டதில், ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் விற்பனை அதிகம். பத்திரப்பதிவு இதுபோன்ற துறைகள் மூலமாக வருவாய் அதிகரித்து இருக்கிறது.சுமார் 1 லட்சத்து 36 ஆயிரம் கோடி வருவாய் அதிகரித்து இருக்கிறது. வருவாயும் அதிகரித்து இருக்கிறது. கடனும் வாங்குகிறார்கள். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. அப்படி என்றால் இடையில் என்ன நடக்கிறது. அதற்கு தான் இந்த விசாரணை கமிஷன்.

தமிழகத்தில் பல கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. 73 ஆண்டு காலம் ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி. தி.மு.க. 2021ல் ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 4 வருடத்தில் கடன் அளவு 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி. மேலும் நடப்பாண்டில் 1 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளதாக தகவல் கிடைத்து இருக்கிறது. ஆக இவ்வளவு கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன.

இன்றைக்கு வருவாய் அதிகரித்து இருக்கிறது. 2024-2025 நிதி நிலை அறிக்கையை ஒப்பிட்டு பார்க்கின்ற போது 2021-2022 ஐ விட கூடுதல் வருவாய் 2024-2025-ல் கிடைத்து இருக்கிறது. சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி வருவாய் வந்திருக்கிறது.அப்படி வருவாய் அதிகரித்து இருக்கிறது. கடனும் வாங்குகிறார்கள். புதிய திட்டம் எதுவும் இல்லை. அதனால் தான் சந்தேகம் ஏற்படுகிறது. அந்த அடிப்படையில் தான் நேற்று அந்த கருத்தை தெரிவித்தேன்.

கேள்வி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேதனையில் இருக்கின்றார்கள். நிறைய பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை தருவதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார்களே.

பதில்: அதாவது தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசு பணியிடம் 4லட்சம் காலியாக இருக்கிறது. அந்த பணியிடம் நிரப்பப்படும் என்று அரசு ஊழியர்களை ஏமாற்றி இளைஞர்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதற்காக அந்த அறிவிப்பை கொடுத்தார்கள்.தி.மு.க. 2021-ல் ஆட்சிக்கு வந்த பிறகு இப்போது 2025 நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்கள். 50 ஆயிரம் பேர்களுக்கு தான் புதிதாக வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது அவர்களின் செய்தி. ஆக 4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதுமட்டுமல்ல. இந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம். இரண்டு மாதத்திற்கு முன்பு கூட ஒரே மாதத்தில் அரசு ஊழியர்கள் 20 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்று இருக்கிறார்கள். அப்படி பார்க்கின்ற போது இந்த 4 ஆண்டில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணி ஓய்வு பெற்று இருக்கிறார்கள். இந்த 4 ஆண்டு காலத்தில் தி.மு.க. ஆட்சியில் வெறும் 50 ஆயிரம் பேருக்கு தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.அவர்களின் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் தி.மு.க. தேர்தல் அறிக்கை பொய் அறிக்கையாகத்தான் பார்க்கப்படுகிறது.

கேள்வி: சிறுவாணி அணை தொடர்ந்து தூர்வாரப்படாமல் இருக்கிறதே?

பதில்: அ.தி.மு.க. ஆட்சி இருந்த நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த அணைகளை எல்லாம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேட்டூர் அணை சுமார் 83 ஆண்டு காலம் தூர்வாரப்படாமல் இருந்தது. மிகப்பெரிய அணை அந்த அணையை தூர்வாரப்பட வேண்டும் என்று விவசாயிகள் இலவசமாக எந்த கட்டணமும் இன்றி ஆங்காங்கே இருக்கின்ற வருவாய்த்த்துறை அதிகாரிகளிடத்திலும், வேளாண் துறை அதிகாரிகளிடமும் சான்றிதழ் பெற்று அந்த மேட்டூர் அணையில் இருந்து வண்டல் மண்ணை அள்ளி செல்லாம் என்று அறிவிப்பு செய்தோம். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் லாரிகளில் வண்டல் மண்ணை அள்ளி சென்றார்கள். சிறுவாணி அணையிலும் அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வார நடவடிக்கை எடுத்தோம். அதுமட்டுமல்ல பல அணைகள். தமிழகத்தில் எந்தெந்த அணைகளில் வண்டல் மண் தேங்கியிருந்ததோ, அதை எல்லாம் அள்ளுவதற்கான நடவடிக்கையை அ.தி.மு.க. ஆட்சியில் எடுத்தோம். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இதுவரை அந்த அணையை தூர்வாருவதற்காக எனக்கு கிடைத்த தகவல் படி இல்லை.என தெரிவித்தார்.

1 More update

Next Story