பல்லாவரம் குடிநீர் விவகாரம்; மாதிரிகள் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்


பல்லாவரம் குடிநீர் விவகாரம்; மாதிரிகள் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
x

குடிநீர் மாதிரியில் கிருமிகள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பல்லாவரம் அருகே தாம்பரம் மாநகராட்சியின் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, பேதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாகவும் பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன், "குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. உணவில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா என விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை. ஒருவர் 88 வயதானவர், நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்தவர். மற்றபடி 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள குடிநீர் மாதிரிகளை கிங் இன்ஸ்டிட்யூட் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில், குடிநீர் மாதிரியில் விப்ரியோ காலரே என்ற கிருமி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது காலரா பாதிப்பிற்கான கிருமி. அந்த கிருமி இல்லை என்பது தொடக்க நிலையிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வயிற்றுப்போக்குக்கு காரணமான வேறு கிருமிகள் ஏதேனும் குடிநீர் மாதிரியில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு அடுத்தகட்ட விவரங்களை வெளியிடுவோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story