அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்


அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
x

கோப்புப்படம்

கோவில் செயல் அலுவலர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மதுரை,

மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, அங்கு பணியாற்றுபவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

அதில், அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்த உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார். இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, "தண்டாயுதபாணி கோவிலில் பணியாற்றக்கூடிய அர்ச்சகர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் அரசு ஊதியம் பெற்று வருகின்றனர். இதனால் அர்ச்சனை தட்டில் பெறப்படும் பணத்தை உண்டியலில் செலுத்த வேண்டும் என்பது விதி. அதன்படி தான் தற்போது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவிட்டதாக மதுரை தண்டாயுதபாணி முருகன் கோவில் செயல் அலுவலருக்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது

இந்நிலையில் மதுரை தண்டாயுதபாணி கோவில் தட்டு காணிக்கை கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாநகரம் நேதாஜி சாலை அருள்மிகு. தண்டாயுதபாணிசுவாமி திருக்கோவில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோவிலாகும். மேற்படி திருக்கோவிலில் பணிபுரியும் அர்ச்சர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால், ஆரம்ப காலத்திலிருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் திருக்கோவில் கணக்கில் லைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இருந்தபோதிலும் திருக்கோவில் செயல் அலுவலரால் தட்டு காணிக்கை தொடர்பாக 07.02.2025 அன்று பிறப்பித்த உத்தரவு மேற்படி திருக்கோவில் செயல் அலுவலரால் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை திருக்கோவில் தக்காரிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதால், மேற்படி திருக்கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story