தூத்துக்குடியில் இருந்து இ.பி.எஸ்.சுடன் ஒரே விமானத்தில் வருவதை தவிர்த்த ஒ.பி.எஸ்


தூத்துக்குடியில் இருந்து இ.பி.எஸ்.சுடன் ஒரே விமானத்தில் வருவதை தவிர்த்த ஒ.பி.எஸ்
x

பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தூத்துக்குடி,

நெல்லை அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மறைவை யொட்டி அவரது உடலுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய பின் தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் பயணம் செய்ய டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்வதை தவிர்த்த ஒ.பன்னீர்செல்வம் நெல்லையில் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் மதுரை வந்து அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.

முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. கோவிலாக கருதும் அ.தி.மு.க. அலுவலகத்தை ரவுடிகள் மூலம் தாக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருக்கவே தகுதியற்றவர். பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியமில்லை. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரிடம் இருந்து பிரிந்தது பிரிந்ததுதான்" என்று அவர் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், "தமிழகத்தில் அ.தி.மு.க. எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லை என்றால் அவமரியாதையை சந்திப்பார். ஒற்றைத் தலைமை வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்று, ஆள் வைத்து பேசினார்கள். ஆனால் இதுவரை நடந்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க.வில் நான் இணைய வேண்டுமென்று கூறவில்லை. பிரிந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழல் உருவாகும் என கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story