மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் படிப்புகள் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

மாணவர்களுக்கு இணைய வழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை,
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தங்கள் உயர்கல்வி சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக இணையவழியில் சான்றிதழ் படிப்புகள் வழங்க கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.
பள்ளி நேரம் முடிந்த பிறகு, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி இந்த சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ் படிப்பை விருப்பம் உள்ள மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வதை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.