எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்: அண்ணாமலை புகழாரம்


எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்: அண்ணாமலை புகழாரம்
x

எம்.ஜி.ஆருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறினார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர், பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர். அவர்களது 37-வது நினைவு தினம். இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்கவியலாத பெயர்களில் எம்.ஜி.ஆரின் பெயர் முக்கியமானது. மூன்று முறை தமிழக முதல்-அமைச்சர் பொறுப்பிலிருந்தும், தான் தனது குடும்பம் என்று எண்ணாமல் தமிழக மக்களுக்காக உழைத்தவர்.

பெருந்தலைவர் காமராஜரைப் போலவே, நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்.ஜி.ஆர். ஒரு சாமானிய மனிதராக, எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் லட்சியவாதியாக எம்.ஜி.ஆர் இருந்தாரோ, பின்னாட்களில் அதிகாரத்திற்கு வந்ததும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில், சமூக நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தமிழகம் அர்ப்பணிப்புடன் இருந்தது. அவரது நலத்திட்டங்களும், தொடர் முயற்சிகளும், தமிழகத்தின் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றியது. தலைசிறந்த தேசியவாதியான எம்.ஜி.ஆர் மீது, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதனை வெளிப்படுத்த அவர் தயங்கியது இல்லை.

எம்.ஜி.ஆருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே, பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள். தாங்கள் பட்ட துயரங்கள். வருங்கால சந்ததியினருக்கும் வரக்கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள்.

எம்.ஜி.ஆர். தமிழகத்தில் உள்ள, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். எம்.ஜி.ஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பிரதமர் மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது.

புகழ் பெற்ற சில தலைவர்களின் வாழ்க்கை. எந்த மறைமுக சூத்திரத்தையும் கொண்டிருப்பதில்லை. பொதுமக்களின் மீது கொண்ட அன்பு, சமூகத்தின் மீது கொண்ட அக்கறை என்ற ஒரே கலவைதான் அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவரான எம்ஜிஆர் அவர்களின் வாழ்க்கை. ஒரு சகாப்தம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story