ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய பிரச்சினை - வைகோ பேட்டி
அமெரிக்க அதிபரை போல் ஆக வேண்டும் என பிரதமர் நினைக்கிறார் என்று வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கோர்ட்டில் தேர்தல் தொடர்பான வழக்கில் ஆஜராக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்தெழவேண்டிய பிரச்சினை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பிரச்சினை. இது நடைமுறையில் சாத்தியமற்றது. எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரே தேர்தல் என்பது கிடையாது. மூன்று மாநில அரசுகள் கவிழ்ந்து விட்டது என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? இது எப்படி சாத்தியம்.
பிரதமர் பதவி வேண்டாம், அமெரிக்க அதிபரை போல ஆகிவிட வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றியவர்கள் இவர்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற மனப்பான்மை பிரதமரிடம் உள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தலை' எதிர்க்க மக்களுடன் இணைந்து போராடவேண்டும்.
வாரணாசியில் நடந்த சனாதன மாநாட்டில் இந்தியா என அழைக்கக் கூடாது பாரத் என்றே அழைக்க வேண்டும். தலைநகரை வாரணாசிக்கு மாற்றவேண்டும். முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ஓட்டுரிமை கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது தான் அவர்களின் நோக்கம். சர்வாதிகார மனப்பான்மை கொண்டுள்ள நரேந்திர மோடி மக்களால் தூக்கி எறியப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.