வாய்க்காலில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
தத்தெடுத்து வளர்த்த ஒன்றரை வயது குழந்தை வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் ஊராட்சி தண்ணீர் பாலம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்தது. அந்த குழந்தை கடந்த பல மாதங்களுக்கு முன்பு நாய் கடித்து இறந்து விட்டது. இதையடுத்து கணபதி-சித்ரா தம்பதியினர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தின் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிஷாந்த் (ஒன்றரை வயது) என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இவர்களது வீடு தென்கரை பாசன வாய்க்கால் கரையோரம் உள்ளது. நேற்று காலை சித்ரா குழந்தை கிஷாந்துக்கு சாப்பாடு ஊட்டி விட்டுள்ளார். பின்னர் வழக்கம்போல், குழந்தையை வீட்டின் முன்பு விளையாட விட்டுவிட்டு, சித்ரா வீட்டிற்குள் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சுமார் அரைமணி நேரம் கழித்து சித்ரா வெளியே வந்து பார்த்தார். அப்போது குழந்தை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்திலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.
இதனால் வீட்டின் அருகே உள்ள தென்கரை பாசன வாய்க்காலில் குழந்தை இறங்கி இருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் மாயனூர் கதவணையில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கதவணையில் இருந்து வாய்க்காலுக்கு செல்லும் தண்ணீரை அதிகாரிகள் நிறுத்தினர். பின்னர் வாய்க்காலில் இறங்கி அப்பகுதி பொதுமக்கள், மீனவர்கள் குழந்தையை நீண்ட நேரமாக தேடினர்.
சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு கிஷாந்த் பிணமாக மீட்கப்பட்டான். அவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தத்தெடுத்து வளர்த்த குழந்தை வாய்க்காலில் மூழ்கி இறந்த சம்பவம் பெற்றோரையும், அப்பகுதி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.