மாணவிகளிடம் ஆபாச பேச்சு: அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாற்றம்
ஆசிரியர் சரவணன் மீது கல்வி அதிகாரிகளிடம் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் முதுகலை ஆசிரியர் சரவணன் என்பவர் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு நேரில் வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, கல்வி அலுவலர் கனகராணி ஆகியோர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் சரவணன் மீது மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்வி அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாணவிகள் கல்வி அதிகாரிகளிடம் புகார் மனுவை அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் பணியாற்றிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் சரவணனை திருவாடனை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.