காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் : டி.டி.வி. தினகரன்
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2024 ஆம் ஆண்டுக்கான காவல் சார்பு ஆய்வாளர் தேர்வை நடத்த தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது . 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் தற்போது வரையில் வெளியாகாத நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வும் நடத்தப்படாத காரணத்தினால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்வு நடைபெறாததால் அந்த தேர்வையே இறுதி வாய்ப்பாக கருதி இரவு, பகலாக தேர்வுக்கு தயாரான ஆயிரக்கணக்கான மாணவர்களின் வயது உச்ச வரம்பு கடந்திருப்பதால் அவர்கள் அடுத்து வரும் தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் அறிவித்த தேர்வுகளை கூட திட்டமிட்டபடி நடத்தாமல் இளைஞர்களின் அரசுப்பணி கனவை கேள்விக்குறியாக்கி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, வயது உச்சவரம்பால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடுவதோடு, அந்த தேர்வுக்கான வயது உச்சவரம்பை 2024 ஆம் ஆண்டுக்கான வயது வரம்பு அடிப்படையிலேயே வெளியிட வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .