"தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது.." - உள்துறை மந்திரி அமித்ஷா


தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது.. - உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 26 Feb 2025 8:50 AM (Updated: 26 Feb 2025 10:25 AM)
t-max-icont-min-icon

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, மக்கள் மத்தியில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

கோவை,

கோவை பீளமேட்டில் இன்று (புதன்கிழமை) காலை பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மாலை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆதிநாராயணன் பெருமாள் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கார் மூலம் அவினாசி ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு கட்சி பிரமுகர்கள், தொழில்துறையினர் அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்து அவருடன் கலந்துரையாடினார்கள்.

அமித்ஷா வருகையையொட்டி கோவை விமான நிலையம் மற்றும் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் வாகன சோதனை, பதற்றத்திற்குள்ளாகும் பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க வின் புதிய மாநகர அலுவலகத்தினை அமித்ஷா திறந்து வைத்தார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில் கோவை நிகழ்ச்சியில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, "தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.

தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் தொகுதி தான் கிடைக்கும், தொகுதி குறைய வாய்ப்பு இல்லை. நான் இங்கு உண்மையை கூறி உள்ளேன், நீங்கள் கட்டாயம் எனக்கு பதில் அளிக்க வேண்டும்

பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பொய்யான தகவல்.

பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ.5 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார். சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மறுநாள் காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.

1 More update

Next Story