வடகிழக்குப் பருவமழை: தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு

விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றுடன் இணையும் பகுதியில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு செய்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (27.10.2025) மேயர் ஆர்.பிரியா, அண்ணாநகர் மண்டலம், வார்டு-106க்குட்பட்ட அரும்பாக்கம் மெட்ரோ அருகில் தமிழர் வீதி, இந்திரா காந்தி பாலம் பகுதியில் செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணி மற்றும் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-109, நமச்சிவாயபுரம் பாலம் அருகே விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றுடன் இணையும் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-117க்குட்பட்ட அண்ணா சதுக்கம் அருகே கூவம் ஆறு கடலில் கடக்கும் முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு, மழைநீர் தங்குதடையின்றி கடலில் கலப்பதற்கான பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






