நெல்லை: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை - மனித உரிமை ஆணையம் விசாரணை


நெல்லை: நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை - மனித உரிமை ஆணையம் விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2024 12:19 PM GMT (Updated: 18 Oct 2024 12:30 PM GMT)

நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

நெல்லை,

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே நீட் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளாக இந்த நீட் பயிற்சி மையம் இயங்கி வருவதாகவும் அங்கு 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லையை தவிர்த்து கேரளா, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதி மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் பயற்சி மைய உரிமையாளர், மாணவர்களை பிரம்பால் கண்மூடித் தனமாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி, காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக்கூறி, மாணவி ஒருவர் மீது காலணியை வீசியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து, மாணவர்களை சித்திரவதை செய்து வந்த நீட் பயற்சி மைய உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story