'வாட்ஸ் அப்' குழு மூலம் போதை பவுடர் சப்ளை: துணை நடிகை கைது விவகாரத்தில் வெளியான பரபரப்பு தகவல்


வாட்ஸ் அப் குழு மூலம் போதை பவுடர் சப்ளை: துணை நடிகை கைது விவகாரத்தில் வெளியான பரபரப்பு தகவல்
x

கோப்புப்படம்

சென்னையில் 'மெத்தம்பெட்டமைன்' எனும் உயர்ரக போதைப் பவுடருடன் சிக்கிய துணை நடிகை கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னையில், தொடர்ச்சியாக அதி நவீன விலை உயர்ந்த போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயப்பேடை அருகே பொதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் சேர்ந்து பெண் ஒருவரும் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் மீனா என்பதும், அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருந்து வருவதும், தொடர்ச்சியாக இப்பகுதியில் இதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள மத்திய உயிர் வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவருக்கு பின்புலத்தில் உள்ளது யார், இவர் யாரிடம் இருந்து இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாங்குகிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 'வாட்ஸ் அப்' மூலம் குழு அமைத்து சினிமா கலைஞர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர் ஆடம்பர பிரியர் என்று கூறப்படுகிறது. அதற்கான செலவுகளுக்காக போதை பொருளை விற்க தொடங்கினார் என்பது விசாரணையில் தெரிந்தது. மேலும், இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக திருமண விழாக்களிலும், ஓட்டல்களுக்கும் சப்ளை செய்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரணை வளையத்தை போலீசார் விரிவுப்படுத்தி உள்ளனர். துணை நடிகை மீனாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story