நாகை மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


நாகை மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

கோப்புப்படம்

இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று முன்தினம் (26.10.2024) மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு நேற்று (27-10-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்-அமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா-இலங்கை இடையிலேயான ஆக்கபூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26-10-2024 அன்று IND-TN-06-MM-5102 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், 2024-ம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், 27.10.2024 அன்றைய நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story