"பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்" - சீமான்

கோப்புப்படம்
பிரபாகரன் உட்பட யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நானும் என்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை.. அவ்வளவுதான்.
நாம் தமிழர் கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். டெபாசிட்டை இழந்தாலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், விலைபோகாத வாக்குகள் எங்களுக்கு பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. ஆனால் தி.மு.க. தனித்து நின்றும், பணம் கொடுக்காமலும் வாக்குகளை பெற முடியாது. ஆனால் தனித்து வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை, அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க.வின் வாக்குகள் என முத்திரை குத்துகிறது திராவிடம்.
15 கட்சிகளின் கூட்டணி வைத்து வாக்குகளை பெறுகிற திராவிடம்தான் இப்படி பேசுகிறது. பா.ஜ.க.வினர் எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும்? அ.தி.மு.க.வோ பா.ஜ.க.வோ நான் வளர வேண்டும் என விரும்புவார்களா..? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்?
நோட்டாவுக்கு கடந்த முறை 797 ஓட்டு கிடைத்தது. தற்போது 6 ஆயிரம் ஆக உள்ளதற்கு காரணம் என்ன. 42 சுயேச்சைகள் 12 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட்டது யார்?
நான் வீரன். எனக்கு படையெல்லாம் தேவையில்லை. சண்டைக்கு தனியாகத் தான் போவேன். என்னை அடிக்க வர்றான் நான்கு பேர் வாங்கனு கூட்டிட்டு போறதுக்கு நான் நாய், நரி கிடையாது. நான் புலி. தனித்து தான் வேட்டையாடுவேன்.நான் துவக்கத்தில் இருந்து சொல்கிறேன். நான் தனியாக தான் நிற்பேன் என்று. கோழைக்கு தான் கூட்டத்தோடு நிற்கணும். கூட்டத்தோடு நிற்பவனுக்கு வீரமும், துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவை. எனது கோட்பாடு தனித்து தான் நிற்கும்.
என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. நாங்கள் சத்தியத்தின் பக்கம் நிற்பவர்கள்; என்னால் முடியவில்லை எனில் எனக்குப் பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள். நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்போது தெளிவு பிறந்ததால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்கள் கொள்கைக்கானவர்கள் அல்ல. நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன்.. என் கேள்விக்குதான் பதில் சொல்ல வேண்டும்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இப்போது நடத்த முடியாமல் போய்விடுமா என்ன? பெரியார் என்பது எங்களுக்கு தேவை இல்லை. உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள், பெரியார் வேண்டும் என்றால் என்னைவிட்டு வெளியேறிப் போய்விடலாம்.
பெரியார் குறித்து நான் கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். இப்பொழுதுதான் நான் தொடங்கியுள்ளேன். இன்னும் போகப்போக நிறைய உள்ளது" என்று சீமான் தெரிவித்தார்.