லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து

லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வருகிற 8-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் மாநகரில், இசைஞானி இளையராஜா நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது நாட்டுக்கு பெருமையளிக்கும் சாதனையாகும். தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் எளிய குடும்பத்தில், இரண்டு சகோதரிகளுடன் பிறந்த பாவலர் வரதராஜன், ஆர்.டி. பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகிய சகோதரர்கள் கம்யூனிஸ்ட் கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு, அமைப்பு சார்ந்த பணிகளுக்காக 1950களில் தொடங்கி, 1972 வரை உழைக்கும் மக்களின் உள்ளக் கொதிப்புகளை ஆயிரக்கணக்கான பாடல்களில் உணர்ச்சி பிரவாகிக்க மேடைகளில் அரங்கேற்றினார்கள்.
பாவலர் வரதராஜன் சகோதரர்கள் இசையும் பாடல்களும் கேட்காத செவிகள் இல்லை என்ற அளவிற்கு எல்லா ஊர்களையும் சுற்றி வந்து உழைக்கும் மக்களுக்கு உதவியதை பெரியவர்கள் இன்றும் பெருமையோடு நினைவு கூர்ந்து வருகிறார்கள். கால ஓட்டத்தில் திரையுலகில் நுழைந்து 1976 அன்னக்கிளி திரைப் படத்தில் அறிமுகமான ஆரம்ப நிலையிலேயே, இசைப் பயணத்தின் திசை வழியை தீர்மானிக்கும் சக்தியாக வெளிப்பட்ட இசைஞானி, இன்று, சர்வதேச நாடுகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்து, இசை வானில் தனித் தாரகையாக ஜொலித்து வருகிறார்.
ஆசியக் கண்டத்திலேயே இவருக்கு நிகராக ஒப்பாரும், மிக்காரும் எவரும் இல்லை என்ற தனிச் சிறப்பு பெற்ற இசை ஞானி இளையராஜாவின் லண்டன் இசைப் பயணம் சிகரம் தாண்டி, உலகை வெல்லும் வெற்றிப் பயணமாக அமையட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.