ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்


ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
x

கோப்புப்படம் 

தி.மு.க. ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசின் காவல்துறையால், பட்டப்பகலிலேயே பேருந்தை வழிமறித்து அதில் பயணித்த பள்ளி மாணவர் ஒருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் அதற்கு அடிப்படையாக திகழும் போதைப் பொருட்கள் விற்பனையும், தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் தலைதூக்கும் என்பதையே இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய காவல்துறை, முற்றிலுமாக செயலிழந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறியிருப்பதே, இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, பள்ளி மாணவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்து, தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story