சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு


சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு
x

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.

சென்னை,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, எம்.பிக்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர்.

இக்குழுவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பிக்கள் குழு ரஷ்யா, கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா, ஸ்பெயின் நாட்டிற்கு சென்று பிரதிநிதிகளை சந்தித்து, இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாதம் குறித்தும், 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தீவிரவாதத்தை எதிர்த்து போராடும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ரஷ்யா, ஸ்லோவேனியா, கிரீஸ், லாட்வியா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முழு ஆதரவு அளிப்பதாக கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்.பிக்கள் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் ஸ்பெயின் நாட்டில் கனிமொழி கருணாநிதி தலைமையிலான எம்பிக்கள் குழுவின் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இன்று (03/06/2025) சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்தில் பூங்கொத்து வழங்கி, மேளதாளம் ஒலிக்க உற்சாக வரவேற்பளித்தனர்.

1 More update

Next Story