நெல்லை, தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


நெல்லை, தென்காசி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 23 Sept 2025 4:25 PM IST (Updated: 23 Sept 2025 7:11 PM IST)
t-max-icont-min-icon

தொகுதி உள்கட்சி பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை,

செப். 23-தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கான அடிப்படை பணிகளை கடந்த ஆண்டு முதல் கவனித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் முதல் தொகுதி வாரியாக நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசித்து வருகிறார். இதுவரை 49 தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஜெர்மனி, லண்டன் சென்றதால் கடந்த 10 நாட்களாக 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில், மீண்டும் 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் தொகுதி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று காலையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு அழைத்து தனித்தனியாக நிலவரத்தை கேட்டறிந்தார். தொகுதி உள்கட்சி பிரச்சினைகளையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

தேர்தல் நெருங்குவதால் கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொகுதியில் கட்சியின் செல்வாக்கு எப்படி உள்ளது? என்பதை கேட்டறிந்து திராவிட மாடல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இன்னும் அக்கறை காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் அடுத்ததாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார். நாளையும் கள ஆய்வு பணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story