பள்ளிக்கு நிலம் கொடுத்த விவசாயிக்கு வீட்டுமனைப் பட்டா - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்


பள்ளிக்கு நிலம் கொடுத்த விவசாயிக்கு வீட்டுமனைப் பட்டா - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
x

தர்மபுரியில் பள்ளிக்கு நிலம் கொடுத்த விவசாயிக்கு வீட்டுமனைப் பட்டாவை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த ஜாலிப்புதூர் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைவதற்காக 2006-ம் ஆண்டில் 80 சென்ட் விவசாய நிலத்தைத் தானமாக வழங்கியவர் விவசாயி முருகேசன். தனது சொந்த நிலத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக வழங்கியபின் குடியிருக்க வீடின்றி இருந்த விவசாயி முருகேசன், ரேகடஹள்ளி கிராமத்தில் இயங்கி வரும் அகரம் மருத்துவமனையில் இரவு காவலராக பணிசெய்து கொண்டு அங்கேயே தங்கி வசித்து வருகிறார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு முருகேசன் குடியிருப்பதற்கு வீட்டுமனை இல்லை என்ற தகவல் வரப்பெற்றதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் அறிவுரைகளின்படி, அவருக்கு பேரூராட்சிகளின் துறை சார்பில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு ரேகடஹள்ளி கிராமத்தில் குடியிருப்பு வீட்டுமனை ஒதுக்கீடு செய்து அதற்குரிய பட்டாவை வழங்கினார்.

வீட்டுமனைப் பட்டாவை பெற்றுக் கொண்ட விவசாயி முருகேசன் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, வேளாண்மை மற்றும உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தருமபுரி மாவட்ட கலெக்டர் கி. சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story