முதல்-அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு


முதல்-அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 3 Jan 2025 11:31 AM IST (Updated: 3 Jan 2025 5:43 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முதல்-அமைச்சரை அவர் சந்தித்துள்ளார்.

சென்னை,

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனான தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்தும் காட்பாடியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது, அந்த வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூரில் தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ. 11 கோடி பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது. இந்த பண விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் வக்கீலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முதல்-அமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story