எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது - அமைச்சர் துரைமுருகன்

கோப்புப்படம்
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பெங்களூரு,
2025-26 நிதி ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சவுதாவில் பட்ஜெட்டை முதல் மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். மேலும், மேகதாது திட்டம் குறித்தும் பேசினார்.
இந்த திட்டம் குறித்து அவர் பேசும்போது, மேகதாது நீர்தேக்கத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் மத்திய அரசின் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்" என்றார்.
இந்நிலையில், காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மேகதாது அணைகட்ட எத்தனை ஆயத்த பணிகளை முடித்து இருந்தாலும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது.
மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக போகாது. ஆகையால், சித்தராமையா சொல்வது சட்டத்துக்கு புறம்பானது. கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எது வேண்டுமானாலும் செய்யும். ஆனால் எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது. அந்தளவிற்கு விட்டுவிட மாட்டோம். சட்டம், நம் பக்கம் இருக்கிறது. நியாயமும் நம் பக்கம் இருக்கிறது என்றார்.
மேகதாது விவகாரம்:
தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
எனினும், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதால், அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்பதையும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.