மாசி மகம்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை


மாசி மகம்: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
x

மாசி மக தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெறுகிறது.

தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக பெருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாசிமக பெருவிழாவும் சிறப்பு பெற்றதாகும். மாசிமக நாளன்று மகாமக குளத்தின் கரையில் சிவன்கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி இன்று மகாமக குளத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், மாசி மகத்தையொட்டி தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாசிமகத்தையொட்டி இன்று (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக இந்த மாதம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story