தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. இல்லை - புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில் அக்கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
கே.பாலகிருஷ்ணன் மத்திய குழு உறுப்பினராக நீடிப்பார். தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. அப்படி கூறுவது பொருத்தமற்றது. மதவெறி சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தை முன்னெடுக்கும். மதவெறி சக்திகளை எதிர்க்கும் தி.மு.க.வுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயல்படும்.
ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவோம். போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை தடுக்க முடியாது. தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறை நீங்கும்வரை போராட்டத்தை தொடர்வோம். பஞ்சமி நிலத்தை மீட்டெடுக்க தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் மக்கள் விரோத நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. வேலை வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கைகளில்தான் மத்திய அரசு ஈடுபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.